பிளாஸ்டிக் வாளியில் வெடிப்பு வந்தால் எறிய மாட்டார்கள். வயரின் உள்ளே இருக்கும் கம்பியால் கவனமாய்த் தையல் போட்டுத் தேயத் தேயப் பாவிப்பார்கள்.
சொந்தக் காலில் கம்பி கிழித்தால் காயத்தை விரித்துக் கையளவு கோப்பியைக் கொட்டிவிட்டு மறுவேலை பார்ப்பார்கள்.
கழுத்து வரைக்கும் கடன் இருந்தாலும் மகளின் சாமர்த்தியவீட்டை ஷாருக்கான் படம் போல நடத்துவார்கள்.
அதே மகள் ரீயோ ஐஸ்கிறீம் கேட்டால் 'காசுக்கு எங்க போறது' என்று கண்ணீரைத் துடைப்பார்கள்.
கடன் வாங்கியேனும் பிள்ளைக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுப்பார்கள்
அதே பிள்ளை ஆறு மணி தாண்டி வீட்ட வராட்டி படலையிலயே தவம் கிடப்பார்கள்.
விஷக்கடிக்கு பரிகாரி மருந்து கொடுத்தாலும் உயிர்போகும் அவசரத்திலும் புட்டோடு குழைத்துத்தான் சாப்பிடுவார்கள். சொதியால் சேர்த்து குழைக்காத சோற்றை சாவுப் பட்டினியிலும் கையால் தொட மாட்டார்கள்.
சாதியை நேரடியாகக் கேட்க மாட்டார்கள். ஊர்,தெரு பெயர் கேட்டு உய்த்தறிவார்கள்.
அன்னம் தண்ணீர் இல்லாவிட்டால் தாங்கிக் கொள்வார்கள். ஞாயிறு ஆட்டிறைச்சி இல்லாவிட்டால் ஆயுளை விடுவார்கள்.
சொர்க்கத்தில் இருக்கும் கடவுளுக்கே கேட்கும் அளவு கோயிலில் சத்தமாய் பாட்டுப் போடுவார்கள்.
பரீட்சையில் பிள்ளைக்கு தொன்னூறுக்குக் குறைவாய் புள்ளி வந்தால் தும்புத்தடியைப் பிரிப்பார்கள்.
தார் உருக்கும் வெயிலில் தேகம் வியர்க்க வந்தாலும் சூடாய் ஒரு கப் பிளேன்ரீதான் கேட்பார்கள்.
அனகொண்டா பாம்பே அவுக்கென்று கடித்தாலும் மரமஞ்சளைக் குடித்துவிட்டு மறுவேலை பார்ப்பார்கள், மரண தேவனே மடியில் ஏறினாலும் மருத்துவமனை வாசல் ஏறவே மாட்டார்கள்.
வருடம் முழுவதும் பஞ்சப்பாட்டுப் பாடுவார்கள், நல்லூர் திருவிழாவில் கண்டதுக்கெல்லாம் காசை விட்டெறிவார்கள்.
அரசையே புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.. அரசவேலை இல்லாவிட்டால் பெண்ணைத் தர மாட்டார்கள்.