லலிதா ஜுவல்லரிக்குள் பொம்மை முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். 7 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களில் ஒருவன் சிக்கியுள்ளார். திருவாரூரில் வாகன சோதனைச்சாவடியின் போது சந்தேகத்திற்கிடமான நபரிடம் பொலிசார் சோதனை செய்தனர். அப்போது, திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் இருந்து 5 கிலோ தங்கம் சிக்கியது. அந்த தங்கத்தின் பார் குறியீட்டை சோதனை செய்ததில், கொள்ளை போன லலிதா ஜூவல்லரி கடையின் நகைதான் என்பதை பொலிசார் உறுதி செய்தனர்.
சிசிடிவி காட்சியில் இருவர் இருந்த நிலையில், அதில் ஒரு கொள்ளையனான மணிகண்டன் மட்டும் சிக்கியுள்ளான். தப்பியோடிய சீராத்தோப்பு சுரேஷை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தப்பியோடிய சுரேஷின் உறவினரான முருகன் அகில இந்திய அளவில் பிரபலமான கொள்ளையன் என்பது குறிப்பிடத்தக்கது. மணிகண்டனும் முருகனின் நண்பன் என்று தெரிகிறது.
இதனையடுத்து, மணிகண்டனை பொலிசார் கைது செய்து திருவாரூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், கொள்ளையடித்ததில் தன்னுடைய பங்கினை மட்டும் பெற்றுக் கொண்டு வந்ததாக மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சி தனிப்படை பொலிசார் திருவாரூருக்கு விரைந்துள்ளனர்.