அது ஒரு கனாக் காலம்!
கரவெட்டியில் ஒரு மதவு இருந்தது
அது மதவடி என்று பெயர் பெற்று இருந்தது
அதில் நிறைய இளைஞர் கூட்டம் இருந்தது
அவர்கள் சிரித்து மகிழ்ந்திட்ட ஒரு காலம் இருந்தது
சோனப்பு வீதியில் அந்த மதவடி இருந்தது
மதவடியில் குந்தி இருந்து பேசிச் சிரித்திட
நண்பர் கூட்டம் ஒன்று எப்போதும் இருந்து வந்ததே
ஒரு வீட்டில் விசேடம் என்றால்
பலகாரப் பெட்டி மதவடி வந்திடுமே
ஒரு வீட்டில் ஓலம் கேட்டால்
ஒடி வரப் பலர் இருந்தனரே மதவடியில்
அருகில் அத்துளு வயல் இருந்தது
அதன் நடுவே ஒரு குளம் இருந்தது
குளம் நிறைய தாமரை மலர்ந்தது
நீச்சல் பழகும் சிறுசுகளாலும்
குளம் கலங்கியும் நிரம்பியும் இருந்தது.
அங்கும் பல சாதிகள் இருந்தன
ஆனால் அதையும் தாண்டி அன்பு இருந்தது
பல மதங்கள் இருந்தன
ஒருபோதும் வேறுபாடு காட்டியதில்லை
பல இயக்கத்தையும் சேர்ந்தவர் இருந்தனர்
உன் இயக்கம் பெரிது என் இயக்கம் பெரிது
என்றதொரு சண்டை நடந்ததில்லையே
மதவடி அருகெங்கும் மதில்களும் வேலிகளும் இருந்தன
ஆனாலும் ஆர்மி வந்தால் ஓடி தப்பிச் செல்ல
அதில் இடைவெளிகளும் கண்டாயங்களும் இருந்தன
மட்டக்களப்பில் இருந்து வந்த பொடியன்களும்
மன்னாரில் இருந்து வந்த பொடியன்களும்
கவலை எதுவுமின்றி குந்தி இருந்த மதவடி இது
எட்டுமுறை ராணுவம் சுற்றி வழைத்தபோதும்
ஒருமுறைகூட யாரும் பிடிபட்டதில்லையே
பொடியன்கள் தில்லையம்பலம் கோவிலடியில்
பசியோடு நிற்கிறான்கள் என அறிந்ததும்
ஓடோடி வந்து புக்கையும் மோதகமும் தந்த ஜயர்
தலையில் துவக்கை வைத்து ஆர்மி மிரட்டிய போதும்
மதவடி பொடியன்களை காட்டிக் கொடுக்க மறுத்தாரே
யாரோ பெத்த பிள்ளைகள்தானே என்று இருந்துவிடாமல்
தான் பெத்த பிள்ளைகளாக எண்ணி சோறு சமைத்து
இராணுவ முற்றுகைக்குள்ளால தைரியமாக வந்து
சோனப்பு சுடலையில் இருந்த பொடியன்களுக்கு தந்த
பாறி அக்காத்தையை மறந்தவிட முடியுமா?
மதவடி அருகில் ஒரு காளி கோவில் இருந்தது
அதில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர்
ஒருநாள் பூசாரியைக் கண்டதும் அவர்கள்
ஆயுதங்களை எடுக்க மறந்துவிட்டதை உணர்ந்தனர்
ஜயோ! பூசாரி ஏசப் போகிறரே என்று
மதவடியில் இருந்த பொடியன்கள் பயந்தவேளை
“அடேய் தம்பியளா! நீங்க வைத்த சாமான்களை
தண்ணி பட்டுவிடக் கூடாதென்று எடுத்து
காளிக்கு பின்னால வைத்திருக்கிறேன்டா”
என்று சொல்லிவிட்டு போனாரே அந்த பூசாரி.
அது ஏதோ வானத்தில் இருந்து கேட்ட
அசரீரி போல் அல்லவா இருந்தது அவர்களுக்கு.
ஒருமுறை ராணுவம் தேடுதல் நடத்தியவேளை
பனம் பாத்தியினுள் மறைத்து வைத்திருந்த
30 பெட்டி சக்கையை (வெடி மருந்து)எடுத்து விட்டது
ஆத்திரம் கொண்ட ராணுவம்
அங்கிருந்த கொட்டிலைக் கொழுத்தியது
அப்புறம் அருகில் இருந்த வீட்டிற்கு சென்றது
அந்த வீட்டில் மறைந்திருந்த பொடியன்
அவசரத்தில் தன் வெடிகுண்டை மறந்து ஓடிவிட்டான்.
அந்த வீட்டில் இருந்த தாயோ உடனே
அந்த வெடி குண்டை வாழையடியில் புதைத்து விட்டு
அதன் மேலே அசையாமல் நின்றாள்
ராணுவத்தை கண்டு பெண்கள் பயந்த காலத்தில்
தனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை
வெடி குண்டை பாதுகாக்க வேண்டும் என்று
தைரியமாக நிமிர்ந்து நின்ற தாய் அவர்.
மதவடி பொடியன்கள் ஒன்றுகூடி
கரவை இளைஞர் ஒன்றியம் என்னும் பெயரில்
வாசிகசாலை ஒன்றையும் நடத்தினார்கள்
அதில் கேடயம், மனஓசை, புதிய ஜனநாயகம்,
புதிய கலாச்சாரம் போன்ற புரட்சி சஞ்சிகைகளும்
இந்தியாவில் இருந்து தருவித்து வைத்தார்கள்.
இவற்றைப் படிப்பதற்கென்றே இளைஞர்கள்
பல ஊர்களில் இருந்தும் தேடி வந்தனர்.
ஒருமுறை இந்திய ராணுவம் இருந்தவேளை
ஊர்க் கோயில் திருவிழாவிற்காக
சுவாமி வெளி வீதி உலா வந்தவேளை
இந்திய ராணவம் வருகின்றது என்றதும்
சுவாமியை அப்படியே வீதியில் போட்டுவிட்டு
காவி வந்த பக்தர்கள் ஓடி மறைந்து விட்டனர்.
கடவுள் பிள்ளையார் கோவில் வீதியில்
தனியாக கிடப்பதைக் கண்ட இந்திய ராணுவம்
பிள்ளையாரை தூக்கிச் சென்று
கோவிலினுள் வைத்துவிட்டு சென்று விட்டனர்.
இதையறிந்த மதவடி பொடியன்கள்
அடுத்தநாள் போஸ்டர் ஒன்று ஒட்டினார்கள்
அதில்,
“பக்தர்களே!
பிள்ளையார் உங்களை காப்பாற்ற மாட்டார்.
போராளிகளே உங்களை காப்பாற்றுவர்”
என்று எழுதியிருந்தார்கள்.
மதவடியில் போஸ்டரைக் கண்டதும்
ஊரே பர பரத்தது.
சிலர் “பிள்ளையாரை எதிர்த்து போஸ்டரா” என்றார்கள்
பலர் “ போராளிகள்தானே எம்மைக் காக்கின்றனர்” என்றனர்.
எட்டு முறை ராணுவம் அதன் மேலாக வந்தபோதும்
ஒருபோதும் அதனை பொடியன்கள் வெடிக்க வைக்கவில்லை
ஊர் அழிந்துவிடும் என்று நினைத்தார்களா- அல்லது
தாம் இருந்து மதகு என்று நினைத்தார்களா தெரியவில்லை
மதவடி இப்போதும் இருக்கிறது
அதில் இருந்த பொடியன்கள் சிலர்
இப்போது உயிரோடு இல்லை
உயிரோடு இருக்கும் சிலருக்கும்
அது ஒரு கனவாகி போனதன்றோ?
மதவடி எப்போதும் இருக்கும்
அதில் பொடியன்கள் எப்போதும் இருப்பர்?
தோழர் பாலன் அண்ணாவின் முகநூலில் இருந்து பெறப்பட்ட பதிவு