சயின்ஸ் பிக்ஷன் மற்றும் காமெடி என்டெர்டெயினர் படங்களைத் தொடர்ந்து, த்ரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.
‘சீமராஜா’ படத்துக்குப் பிறகு, ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஒரு படத்தை, எம்.ராஜேஷ் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில், ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா.
இன்னொரு படத்தை, ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்குகிறார். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகும் இதில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடிக்கிறார். ‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஷால், சமந்தா நடிப்பில் இந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன், அடுத்து சிவகார்த்திகேயனை இயக்கப் போகிறார்.
அடுத்த ஆண்டு தொடங்கப்படும் இந்தப் படம், த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் த்ரில்லர் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தையும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.