ஜோதிடக் கலை என்பது ஒரு மிகப்பெரும் சமுத்திரத்தை போன்றது. அதிலிருக்கும் எல்லாவற்றையும் கற்று பண்டிதனாக ஒரு மனிதனின் வாழ்நாள் போதாது. இந்த ஜோதிடத்தில் ஒரு மனிதன் பிறக்கும் போது அன்றைய நாள், நட்சத்திரம், திதி போன்ற பலவற்றை கணக்கிட்டு எழுதப்படுவது ஜாதகம் எனப்படும். அந்த ஜாதகத்தை ஆராய்ந்தோமேயானால் ஒரு சிலருக்கு சில கிரகங்கள் மூலமாக யோகம் ஏற்படுவதை அறியலாம். அப்படி மிகவும் அரிதாக ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய சிம்மாசன யோகத்தை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்குரிய அதிபதி 10 ஆம் வீட்டில் இருக்க, 10 ஆம் வீட்டிற்குரிய அதிபதி லக்ன வீட்டில் இருந்தால், இந்த “சிம்ஹாசன” யோகம் ஏற்படுகிறது. உதாரணமாக உங்களின் லக்னம் ரிஷபம் என வைத்து கொள்வோம். ரிஷபத்திற்கு அதிபதி சுக்ரன். ரிஷபத்திற்கு 10 ஆம் வீடாக வருவது கும்பம் (ரிஷபத்தில் இருந்து 10 வது ராசி) இதன் அதிபதி சனிபகவான் ஆவார்.
இப்போது சனிபகவான் ரிஷப லக்கினதிலில் இருந்து, சுக்கிரன் 10 ஆம் வீடான கும்ப ராசியிலிருக்க சிம்மாசன யோகம் ஏற்படுகிறது.
சிம்மாசன யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல கம்பீரமான உடலமைப்பையும், முகத்தோற்றத்தையும் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் செல்வந்தர்கள் மற்றும் அரச குடும்பத்தில் பிறந்தவர்கள் இத்தகைய யோகத்தை கொண்டிருப்பார்கள். கலா ரசிகர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் உடல் பலத்தை காட்டக்கூடிய வீரக்கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். நீதி நேர்மை போன்ற குணங்களை அதிகம் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும் அதை சரியான வகையில் ஆய்ந்து எல்லோருக்கும் பொதுவான ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்ப்பை அளிப்பார்கள். கலைத்துறைகளில் இவர்கள் ஈடுபட்டால் மக்களை அதிகளவு ஈர்க்கக்கூடிய திறனை கொண்டவர்களாக இருப்பார்கள். பல வகையான சுகங்களை அனுபவிப்பார்கள்.
அதே நேரத்தில் தன் நாட்டிற்காகவும் தான் நேசிக்கும் மக்களுக்காகவும் அத்தகைய சுகபோகங்களை தியாகம் செய்வர். இந்த ஜாதகர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் 10 ஆவது இடத்தில் குரு, செவ்வாய், சுக்கிரன், போன்ற கிரகங்கள் இருந்தால், அவருக்கு நாட்டை ஆளக்கூடிய பிரதமர், ஜனாதிபதி போன்ற பதவிகளை அடையும் யோகம் நிச்சயம் உண்டு. இத்தகைய உயர்பதவிகளை அடையவில்லை என்றாலும் கூட ஒரு சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவாவது இருக்க கூடும். அரச பரம்பரையில் பிறந்த எவருக்கேனும் இந்த சிம்மாசன யோகம் அவர்களின் ஜாதகத்தில் இருக்கும் பட்சத்தில், அடுத்த அரசராக முடிசூட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் இவர்களுக்கு அதிகம். இவர்கள் இறுதி காலம் வரை வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள்.