லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.
முதன் முறையாக இயக்குனர் லிங்குசாமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிவடைந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இறுதி கட்ட படப்பிடிப்பு கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் நியூசிலாந்தில் நடக்க இருக்கிறது. சமந்தா இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.
லிங்குசாமியின் வட்டாரத்திலிருந்து கசிந்த வரையில் படத்தின் கதையாக, சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான சூர்யா, மும்பையில் நடக்கும் ஒரு கருத்தரங்கிற்காக செல்கிறார். மும்பையில் தன் கண்முன்னால் நடக்கும் ஒரு தவறை தட்டிக் கேட்கிறார். அது சின்ன தவறுதான். ஆனால் அதற்கு பின்னால் மும்பையின் அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் இருக்கிறார்கள்.
தன் வேலையை முடித்து விட்டு சூர்யா சென்னை வந்து விடுகிறார். வந்த உடனேயே அவரது வேலை பறிக்கப்படுகிறது. அவருக்கும், அவரது குடும்பத்துக்கும், காதலிக்கும் முகம் தெரியாத மனிதர்களால் அச்சுறுத்தலும், பிரச்னைகளும் வருகிறது.
அவை எல்லாமே மும்பை தாதாக்களால் செய்யப்படுவது. அப்போதுதான் சூர்யாவுக்கு மும்பை சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது. அப்படி பெரிதாக எதுவும் செய்யவில்லையே என்று துளாவி பார்க்கும்போதுதான், மும்பையில் நடந்தது சாதாரண விஷயம் இல்லை நாம் வசமாக தாதாக்களின் வலையில் சிக்கி விட்டோம் என்பதை உணர்கிறார்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதைப்போல தாதாக்களை சந்திக்க சூர்யாவும் தாதாவாக மாறுகிறார். இதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.